23.02.2012

ராமகிருஷ்ணரின் 175 வது பிறந்த நாள் விழா கோலாகலம்!

சென்னை: ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 வது பிறந்த நாளையொட்டி, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. விவேகானந்தரின் ஆன்மிக குருவான ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 வது பிறந்த நாள் விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டியும், சென்னை, மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் உள்ள சமய சமசரக் கோவிலின் 12 வது ஆண்டு விழாவையொட்டியும், ஐந்து நாள், ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு, ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்துள்ளது. நேற்று காலை 5 மணிக்கு, மங்கள ஆரத்தியுடன் இந்நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து, சமய சமரசக் கோவில் கும்பாபிஷேகத்தின் வீடியோ காட்சிகள், சிக்கல் குருசரணின் இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடந்தன. இன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தா மகராஜ், ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த நாள் விழா மலரை வெளியிடுகிறார். தொடர்ந்து "உபநிஷதங்களின் சாரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா எனும் தலைப்பில், மதுரை, சின்மயா மிஷன் நிர்வாகி, சுவாமி சிவயோகானந்தா சொற்பொழிவாற்றுகிறார். சுவாமி அஸ்தோசானந்தா, சுவாமி கவுதமானந்தா மகராஜ் ஆகியோரும் உரையாற்றுகின்றனர். நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம், ஜைனம் மற்றும் புத்த மதங்களைச் சேர்ந்த அறிஞர்கள், தங்கள் மதம் குறித்து சிறப்புரை ஆற்றுகின்றனர். இரவு 7 மணிக்கு, "வேதமூர்த்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா எனும் தலைப்பில், சுவாமி ஓங்காரனந்தா சொற்பொழிவாற்றுகிறார். நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மடாதிபதிகளின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், கோவை சீரவை ஆதீனம், நாஞ்சியார் கோவில் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மதியம் 2.45 மணிக்கு, விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்ரமணியம் தலைமையில், " ஸ்ரீ ராமகிருஷ்ணரின் புகழ் எனும் தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. மாலை 4.15 மணிக்கு, "பெண்கள் நலனுக்கு ராமகிருஷ்ணரின் வழிகாட்டுதல் எனும் தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. இதை, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி துவக்கி வைக்கிறார். வரும் 26ம் தேதி, காலை 10 மணி முதல் 12.30 மணி வரை, "வாழும் வரை கற்றல் எனும் தலைப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதில், மத்திய அரசின் சாந்தி சொரூப் பட்னாகர் விருது பெற்ற, சுவாமி வித்யானந்தா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இம்முக்கிய நிகழ்வுகளோடு, தினமும் பிரபல இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், பஜனைகள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. "ஐந்து நாள் விழாவில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என, ராமகிருஷ்ணா மடம் தெரிவித்துள்ளது.