28.02.2012

நாராயணனை வணங்குவோம்

''ஹரியை நான் துதிக்கிறேன். அவன் சர்வவியாபி. இந்த உலகம் தோன்றுவதற்கு காரணமான பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் வகையில் தான், சம்சார சக்கரம் அவனிடம் சுழல்கிறது. இந்த உலகம் அவனிடமிருந்தே தோன்றி உள்ளது. அது ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதும், இன்ப துன்பங்களின் மூலம் இயங்குவதும் அவனால்தான். அவன் ஆனந்தமே வடிவானவன். பூரணமாக இருப்பவன். எண்ணற்ற குணங்களை உடையவன். அவனையன்றி வேறு ஏதுமே இவ்வுலகில் இல்லை.

அவன் அனைவருக்குள்ளும் வசிக்கிறான். அவனது உடலே நமது உடல். எல்லாம் தெரிந்த அவனை எவராலும் அறிய முடியாது. அவனே உண்மைப்பொருள். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வேள்வி என அவன் பலவிதமாக கூறப்படுகிறான்.

ஏக பரமாத்மாவாகிய அவன் விவரிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதன் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஐக்கியப்படுகிறான்.

சிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.

விஷ்ணு பிரபுவே! என் கர்வத்தை அழித்துவிடு. என் மனத்தின் தீய போக்குகளை அடக்கு. விஷய இச்சைகளான கானல் நீரை நீக்கு. எவ்வுயிரின்பாலும் உள்ள உன் கருணையை என்னிடமும் காட்டு. இந்த சம்சார சாகரத்தினின்று என்னை விடுவித்துவிடு. பல அவதாரங்கள் எடுத்து உலகை நீ என்றும் காக்கிறாய். இவ்வுலக துன்பங்களைக்கண்டு அஞ்சி, இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்''.