14.07.2012

செடியும் மனித வாழ்வும்



இந்த உலகத்திலே நிறைய நோயும் துன்பமும் தூண்டுதலும் இருப்பதால் இது கெட்ட உலகம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நற்கருமங்கள் செய்து, ஜபம், தியானம் ஆகியவற்றைப் பயின்றுவந்தால் சாஸ்வதமான பேரானந்தத்தை அடையலாம்.
உங்களுடைய உள்ளத்தைத் திருத்தி அதைப் பக்குவப்படுத்துங்கள். இந்த கெட்ட உலகமானது, உங்களுக்கு இனிய சுவர்க்கமாக ஆகிவிடும். உங்களுக்கு இந்த உலகத்தைப் பற்றி மாறுபட்ட திருஷ்டி உண்டாகும்.
இந்த மனத்தினுடைய தந்திரத்தினால்தான் ஒரு பர்லாங் தொலைவு வெகு தொலைவாகவும், மூன்று மைல்கள் மிகக் குறைந்த தொலைவாகவும் தோன்றுகிறது. நீங்கள் இதை உங்களது வாழ்க்கையிலே கவனித்திருக்கலாம்.
மனிதனை ஒரு செடிக்கு ஒப்பிடலாம். அவன் செடியைப் போல வாழ்கிறான். செழிப்படைகிறான். முடிவிலே இறந்துவிடுகிறான். ஆனால், முற்றிலும் இறப்பது இல்லை. செடியும் வளருகிறது. செழிக்கிறது. முடிவில் இறந்து விடுகிறது. அது தனக்குப் பின்னால் ஒரு புதுச்செடியை உண்டாக்கவல்ல விதையை விட்டுச் செல்கிறது.
மனிதன் இறக்கும்பொழுதும் பின்னாலே அவனுடைய கர்மங்களை விட்டுச் செல்கிறான். இந்த ஸ்தூல சரீரம் சாகலாம். அழியலாம். ஆனால் அவனுடைய செய்கைகளின் பாதிப்புகள் சாகிறதில்லை.
ஓர் அட்டையானது ஒரு புல்லின் இதழ்மீது நகர்ந்து கொண்டே சென்று அதன் நுனியை அடைகிறது. அது முதலில் மற்றொரு இதழை அதனுடைய உடலின் முன்பகுதியால் பற்றிக்கொண்டு பிறகு அதனுடைய பிற்பகுதியை அது இழுத்துக்கொள்கிறது. இதேபோல் இந்த ஜீவாத்மா சாகும் தருவாயில் இந்த உடலை விட்டுவிட்டு அவனுடைய எண்ணத்தின் மூலமாக அடுத்துவரும் தேகத்தை நிர்ணயித்துக்கொண்டு அந்த உடலிலே புகுகின்றது.