30.12.2012

சம்பாதிக்கும் வரை தான் மதிப்பு

குருடன் எவ்வாறு பிரகாசிக்கும் சூரியனை காண இயலாதோ அது போல, ஞானம் இல்லாதவன் உயிர்களில் இறைவனைக் காண இயலாது.நம் உயிரைப் பறிக்கும் காலதேவன் நம்மை விடாது நெருங்குவது அறிந்தும், நாம் பயிலும் சாத்திர அறிவு நம்மை பாதுகாக்கும் என்றெண்ணி மதிமயக்கத்தில் இருக்காதீர்கள். உற்ற துணை கோவிந்த நாம சங்கீர்த்தனமே. அவனை போற்றி வழிபடுங்கள். யமனின் பாசக்கயிற்றில் இருந்து தப்பிக்க இதுவே வழி. சம்பாதிக்கும்வரை மட்டுமே சொந்தபந்தங்கள் நம் மீது அன்பு காட்டும். எனவே, சொந்தபந்தம் மற்றும் நட்புகளிடம் தாமரை இலை நீர்த்துளி போல பட்டும் படாமல் வாழ்வதே சிறந்தது. பாலபருவத்தில் விளையாட்டில் கருத்து செலுத்துகிறோம். இளைஞனாய் திரியும் காலத்தில் காதல் விளையாட்டில் மனம் அலைபாய்கிறது. கிழப்பருவத்தில் குடும்பக்கவலைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. எவரும் மெய்ப்பொருளாகிய இறைவன் மீது நாட்டம் கொள்வதே இல்லை. இரவுக்குப் பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், வாட்டி எடுக்கும் குளிர்காலத்திற்குப்பின் வசந்த காலமும் மாறி மாறி வருகின்றது. காலம் மாறிமாறி வந்து லீலை புரிகின்றது. ஆயுள் தேய்ந்து கொண்டே போகின்றது. இப்படியிருந்தும் வீண்ஆசைகள் மட்டும் நம்மை விட்டு தேய மறுக்கிறது.