30.12.2012

கடும் முயற்சி விதியை வெல்லும்

வானிலிருந்து பெய்யும் மழையே இவ்வுலக மக்களுக்கு வாழ்வளிக்கிறது. மக்களின் உயிரைக் காக்கும் மழைநீர் அமுதம் போன்றதாகும். இத்தகைய மழைநீர் இல்லாவிட்டால் பூவுலகில் சிறு பசும்புல்லினைக் கூடப் பார்க்க முடியாது.
நேராக இருக்கும் அம்பு, பிறருக்கு கொடிய காயத்தைத் தரும். வீணை வளைந்திருக்கும். ஆனால் தன்னை மீட்டி மகிழ்பவர்களின் செவிகளுக்கு இனிய இசையை கொடுக்கும். அதனால் ஒருவரது உருவத்தை வைத்து மட்டும் குணத்தைக் கணிக்கக் கூடாது. அவர்களது செயல்களை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
விதி என்று ஒன்று இருக்கிறது. அதை கண்டு சோர்ந்து விடாமல், மாற்றியமைக்க இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். ஆனால், பெயரளவில் முயற்சி இருந்தால் அதனால் பயனேதும் இல்லை. பெருமுயற்சி வேண்டும். அப்படி முயற்சிப்பவன் செய்பவன், விதியையும் வெல்லும் திறம் பெற்றிருப்பான்.
நாம் பேசும் சொற்கள் பொருளுடையதாக இருக்க வேண்டும். பொருளுடைய சொற்களால் பயனுண்டாகும். பயனற்ற வீணான சொற்களைப் பேசுபவன் தன் வாழ்நாளை வீணாக்குபவன் ஆவான். அப்படிப்பட்ட ஒருவனை மக்களுள் பதடி (பயனற்றவன்) என்று தான் அழைக்க வேண்டும். - திருவள்ளுவர்