01.01.2012

ஈழத்தில் நாவலர்

உலகில் தோற்றம் பெற்ற மதங்களுக்குள் இந்து மதமே மிகம் புனிதமானது. தமிழ் மொழியே ஆதியானது. இவை இரண்டும் ஈழத்தில் மிகப் புராதன காலப்பகுதியில் இருந்தே மிகச் செல்வாக்குடன் காணப்பட்டன. பஞ்ச ஈஸ்வரங்கள் இதற்கு சான்றாகும். திரு மூலர் "சிவபூமி' என இலங்கையினை அழைப்பதனைக் காண முடிகிறது. இலங்கையினை ஆண்ட புராதன சிங்கள மன்னர்கள் கூட இந்து மதத்திற்கு நிறைவான பல பணிகளை மேற்கொண்டனர். அனுராதபுரத்தை தலைநகராக்கிய பண்டுகாபய மன்னன் அரச சபையில் அந்தணருக்கு ஒரு தொகுதியை வகுத்திருந்தான். இம்மன்னன் சிவலிங்க வழிபாட்டை ஆதரித்து சிவிக சாலைøயும் வேதங்களை பிராமணர்கள் ஓதுவதற்குரிய சொத்திக சாலையையும் நிறுவினார்.
எல்லாளனை போரில் தோற்கடித்து துட்டகைமுனு மன்னன் கதிர்காமம் சென்று நேர்த்திக்கடன் மேற்கொண்டதாக "கந்த உபத' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "முத்தசிவ'  "மகாசிவ' "அடசிவ'  "கிரிகண்டசிவ' முதலான மன்னர்களும் சிவ என்ற அடைமொழியை வைத்து ஆட்சி புரிந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு சிறப்புற்ற நமது மதம் ஐரோப்பிய வருகை காரணமாக கடுமையாக தளர்ச்சி கண்டது.
இலங்கையில் புகுந்த பிரித்தானியர்கள் இந்து மதத்திற்கு எதிராக கிறிஸ்தவத்தையும், தமிழ் மொழிக்கு எதிராக ஆங்கில மொழியையும் பரப்பினர். இதனால் இந்து மதமும் தமிழ் மொழியும் கடுமையான தளர்ச்சி கண்டன. ஆங்கிலேயர்களின் கவர்ச்சிப் போக்கினாலும் அற்ப சொற்ப சலுகைகளினாலும் ஆசை வார்த்தைகளையும் நம்பி நம்மவர்கள் பலர் மதம் மாறினார்கள். ஈழத்தில் இந்து மதம் அழிந்து விடுமோ என பலர் எண்ணிய போதுதான் விடி வெள்ளியாக இந்து மதத்தின் காவலாக  1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கந்தப்பிள்ளை சிவகாமி தம்பதியினரின் புதல்வனாக ஆறுமுகம் என்ற பெயரோடு அவதரித்தவரே ஆறுமுகநாவலர்.
இந்து மதத்தையும் தமிழ் மொழியையும் வளப்படுத்த சமயப்பணி, கல்விப்பணி, பதிப்பாசிரியர் பணி, சமூகப்பணி என தனது பணிகளை மேம்படுத்தினார். சமயப் பணிகளில் பிரசங்கம் செய்தல், பிரபந்தங்கள் இயற்றுதல், புராணப் படலம் செய்தல், பண்ணிசையை வளர்த்தல், ஈழத்து ஆலயங்களை புனரமைத்தல் என்னும் அடிப்படையில் மேற்கொண்டார். கல்விப்பணியை மேன்படுத்த 1848 இல் வண்ணார் பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையையும் 1864 இல் சிதம்பரத்தில் வித்தியாசாலை ஒன்றையும் 1872  ஆம் ஆண்டு புலோலியில் சைவ ஆங்கில வித்தியாசாலை ஒன்றையும், 1872 ஆம் ஆண்டு கோப்பாய் வித்தியாசாலையையும் நிறுவினார்.
நாவலரது சமயப் பணியும் கல்விப்பணியும் சிறக்க பதிப்பாசிரியர் பணியினை திறம்பட மேற்கொண்டார். 1849 ஆம் ஆண்டு நல்லூரில் வித்தியானுபாலஅச்சு இயந்திர
சாலையை நிறுவி அதன் ஊடாக பல நூல்களை எழுதி வெளியிட்டதோடு பல நூல்களுக்கு விளக்கவுரையும் எழுதினார்.  இவரது உரை நடை சிறப்பை உணர்ந்து "உரைநடையின் தந்தை' என நம்மவர்கள்  அழைப்பது சிறப்புக்குரியது.  இதேபோல் நாவலர் சமூகப்பணியையும் திறம்பட மேற்கொண்டார். 1876  1877 காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது கஞ்சித் தொட்டி அமைத்து சேவை புரிந்தார். சமூகத்தை பாதிக்கும் மதுபாவனை, சூதாடுதல் முதலியவற்றை ஒழிக்கப் பாடுபட்டார்.
யாழ்ப்பாணக் கச்சேரி நிர்வாக ஊழல்கள் தொடர்பாக 1878 ஆம் ஆண்டு அங்கு வந்து தேசாதிபதிக்கு விண்ணப்பம் ஒன்றை வழங்கினார். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் வேளாண்மைசங்கத்தை நிறுவி விவசாயிகளுக்கு உதவி புரிந்தார். இவ்வாறெல்லாம் சேவை புரிந்த ஆறுமுகநாவலர் 1879 ஆம் ஆண்டு இறைபதம் அடைந்தார். ஆறுமுகநாவலர் எத்தகைய இறைமொழி சிந்தனைகளை ஏற்படுத்தினாரோ அதனை ஒவ்வொரு இந்துக்களும் பின்பற்ற முன்வரவேண்டும். நாவலரை எதிர்த்து வாதம் செய்த எவரும் வெற்றி கண்டது கிடையாது. அந்தளவிற்கு சிறந்த பேச்சாளராக விளங்கினார். ஆறுமுகநாவலரின் நினைவுகளை சிறப்பிக்கும் முகமாக 1969 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் அவரது உருவச்சிலையினை ஊர்வலமாக எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் மிகப் பெரும் விழா நடாத்தப்பட்டதும் இலங்கை அரசானது நாவலரை கௌரவிக்கும் முகமாக 1971  10  29 ஆம் திகதி முத்திரை ஒன்றை வெளியிட்டது விசேட அம்சமாகும். ஐந்தாம் சமய குரவர் என போற்றப்படும் ஆறுமுகநாவலரின் இந்துமத, தமிழ் மொழி பணிகளை நாம் ஒவ்வொருவரும் ஏற்று நடப்போம் என்றார்.
GJKMEDIAWORKS